டெல்லி:

எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், முதுகலை மருத்துவ கல்வியில் சேர நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சிறப்பு சட்டமும் இயற்றப்பட்டது.

இச்சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறுவது அவசியம். அதனால் இச்சட்ட மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் பெற ஜனாதிபதிக்கு எவ்வித கடிதமும் வரவில்லை என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

ராஜ்யசபா உறுப்பினரான டி.கே. ரெங்கராஜன் இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த மாதம் 14ம் தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு மாளிகையின் தனி அதிகாரி ராய் பதிலளித்துள்ளார். அதில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து எவ்வித கடிதமும் பெற வில்லை என்று கடந்த மாதம் 20ம் தேதி எழுதிய பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நீட் தேர்வு எழுதுவதில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உறுதியாக தெரியவந்துள்ளது.

அ.தி.மு.க.வில் நடக்கும் உட்கட்சி பூசலில் ஆட்சி ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. இவர்களது பதவி சண்டையில் தமிழக மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டார்களே என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.