டெல்லி:
2020-21 நிதியாண்டில் தொழிற்சாலைகளுக்கு குத்தகை கட்டணம் உயர்த்தப்படாது என மத்திய தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
இதையடுத்து, கடந்த 4ந்தேதி சம்பந்தப்பட்ட துறைகளுடன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கலந்துரையாடலில், இந்தியத் தொழில், வணிகக்கூட்டமைப்பு, (FICCI), இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு (CII), தொழில், வணிகங்களுடன் தொடர்புடைய அமைப்பான ASSOCHAM, பிஎச்டி வர்த்தக சபை (PHDCCI) உட்பட பல்வேறு முக்கிய அமைப்புகள் பங்ககேற்றன.
அதில், தொழிலில் நிலவிவரும் சூழலை எளிமைப்படுத்த, மத்திய மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் நடப்பு ஆண்டில் குத்தகை தொகையை அதிகரிக்க கூடாது; 2020-21 நிதியாண்டில் தொழிற்சாலைகளுக்கு குத்தகை கட்டணம் உயர்த்தப்படாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், முதல் காலாண்டிற்கான குத்தகை தொகையை செலுத்த கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.