டில்லி:
பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளர்களுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட மாட்டாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா என்ற விருது வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற மாற்று திறனாளிகளுக்கு இந்த விருது அளிக்க கொள்கையில் இடமில்லை என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கபடி போட்டிக்கான சின்னத்தை அறிமுகப்படுத்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அகமதாபாத் வந்தார். உலக கபடி போட்டிகான சின்னத்தை அறிமுகப்படுத்தினர். அதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது, சமீபத்தில் முடிந்த ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமரால் வழங்கப்பட்ட ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது போன்று, பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுமா என கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த் மத்திய அமைச்சர் விஜய்கோயல், ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு என வகுக்கப்பட்ட கொள்கைகளில் அதற்கு இடமில்லை. எனவே கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர விரைவில் ஆவன செய்வோம் என்று தெரிவித்தார்.
ரியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடி 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.