புதுடெல்லி: எண்ணெய் வளம் வேண்டுமென்றால் மக்கள் வசிக்காத இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துங்கள்; தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள் என்று ராஜ்ய சபாவில் பேசினார் திமுக உறுப்பினர் திருச்சி சிவா.

அவர் பேசியதாவது, “சமூகத்திற்கு பணத்தைவிட ஆரோக்கியம்தான் முக்கியம். நாங்கள் பணக்காரர்களாக இருப்பதைவிட ஆரோக்கியமாக இருப்பதையே விரும்புகிறோம். தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதோடு, காவிரியிலும் தண்ணீர் வராததால் டெல்டா விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாக மாறுகிறது. இதனால் 1000 முதல் 2000 மீட்டர் ஆழம் சென்றால்தான் தண்ணீரே கிடைக்கிறது.

விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் தங்களின் தொழிலையே விட்டுவிட்டு கிராமங்களிலிருந்து வெளியேறுகிறார்கள். எங்களுக்கு ஆரோக்கியம்தான் முக்கியம். எனவே, புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி வழங்காததோடு, தற்போதுள்ள கிணறுகளிலும் பணிகளை நிறுத்துங்கள். அந்த திட்டத்தை மனிதர்கள் வசிக்காத பகுதிகளில் கொண்டுபோய் செயல்படுத்துங்கள்” என்று பேசினார்.