சென்னை:

மிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்ற  இஸ்லாமிய அமைப்புகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களிடம், அதிமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று  தமிழக முதல்வர் உறுதி கூறினார்.

மத்தியஅரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டத் தில் குதித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில்  குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர்,  உள்பட மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி 23 இஸ்லாமிய அமைப்பினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளரும்,  நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும், மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில், அதிமுக சிறுபான்மையினர் பிரிவு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா ஆகியோரும் உடன் இருந்தனர்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இஸ்லாமிய மக்களிடையே மிகுந்த அச்சம் உள்ளதால் தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என முதல்வரிடம் இக்கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, அவர்களிடம், அதிமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.