டில்லி

கொரோனா அதிகரித்து வரும் வேளையில் முகக் கவசம், வெண்டிலேட்டர்கள், சோதனை கருவிகள், சானிடைசர் போன்றவற்றுக்கு அரசு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்காமல் உள்ளது.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதனால் நாட்டில் ,முகக் கவசம், வெண்டிலேட்டர்கள், சோதனைக் கருவிகள் சானிடைசர், பிபிஇ கவச உடை போன்ற பொருட்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது.  இவை அனைத்தும் தற்போதைய சூழலில் மிக்வும் அத்தியாவசியமான பொருட்கள் ஆகும்.    இவை இல்லையென்றால் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை நடத்த முடியாமல் போகும்.

தற்போது வெண்டிலேட்டர்களுக்கு 12%, முககவசத்துக்கு 5%, சோதனைக் கருவிகளுக்கு 12%, சானிடைசருக்கு 18% பி பி இ கவச உடை ரூ.1000க்கு குறைவான விலை இருந்தால் 5% அதற்கு மேல் விலை இருந்தால் 12% என  ஜி எஸ் டி வரி விதிக்கப்படுகிறது.  தற்போது இவை அவசியத் தேவை பொருட்களாக உள்ளதால் இவற்றுக்கு ஜி எஸ் டி விலக்கு அளிப்பதால் விலை குறையும் என கோரிக்கை விடபட்டுள்ளது.

இந்நிலையில் அரசு தரப்பில் ஜி எஸ் டி யில் இருந்து இவற்றுக்கு விலக்கு அளித்தால் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் மூலப்பொருளுக்குத் தயாரிப்பு நிறுவனம் செலுத்தியுள்ள ஜிஎஸ்டியை திரும்பப் பெற முடியாது. இதனால் இந்த மூலப்பொருளின் ஜிஎஸ்டி இணைந்து விற்பனை விலையில் எதிரொலிக்கும் என்பதால் விலை அதிகரிக்கும் எனக் காரணம் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்தால் அது உற்பத்தியாளர்களுக்கும் பயன் அளிக்காது எனவும் கூறப்படுகிறது.   இந்த பொருட்களை உற்பத்தி செய்வோர் இந்த பொருட்களுக்கான மூலப் பொருட்கள், செய்வதற்கான செலவு ஆகியவற்றைத் தனியாக கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும்.  பொதுவாக இந்த பொருட்களைச் செய்யும் நிறுவனங்கள் வேறு பல பொருட்களையும் உற்பத்தி செய்வதால் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு என சொல்லப்படுகிறது.