திருவனந்தபுரம்: மாநிலத்தில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள் என்ற பாகுபாடுகள் இனிமேல் கிடையாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.
அதேசமயம், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோர்கள் விஷயத்தில் அதிக கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் பினராயி விஜயன்.
அவர் மேலும் கூறியதாவது, “மாவட்டங்களுக்கான மொத்த ஊரடங்கு நீக்கப்படும். அதேசமயம், ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். அதேசமயம், தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக, சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களைத் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வந்தது” என்றார்.
இதற்கு முன்னர், அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களும், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு மண்டலப் பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டிருந்தன.
பச்சை மண்டலப் பகுதிகளில், பொதுப் போக்குவரத்து மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இனிவரும் நாட்களில், விதிமுறையை மீறும் நபர்களின் மீது வழக்குப் பதியப்படும் என்றும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.