சென்னை,
துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெற தடை கோரிய வழக்கில், பட்டமளிப்பு விழா நடத்தலாம் என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெறுவதை தடைசெய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில்,. அண்ணா பல்கலைக்கழகத்தின் 37 வதுபட்டமளிப்பு விழா 19ந் தேதி (நாளை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி தற்போது காலியாக உள்ளது. துணைவேந்தர் இல்லாத பட்டமளிப்பு விழா துணை வேந்தர் இல்லாத காரணத்தினால் பட்டமளிப்பு சான்றிதழில் தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கையெழுத்து போட்டு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவை துணை வேந்தர் இல்லாமல் நடத்த முடியாது. பட்டமளிப்பு சான்றிதழில் துணை வேந்தர் மட்டுமே கையெழுத்திட தகுதியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை வேறு யாராவது கையெழுத்திட்டால் அந்த சான்றிதழ் செல்லாது. எனவே இந்த பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணிம் முன்பு கடந்த 10ந் தேதி விசாரணைக்கு வந்த போது இந்த மனுவுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம். கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்ததது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி,
துணை வேந்தர் இல்லாத பட்சத்தில் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பட்டமளிப்பு விழாவை நடத்தலாம். அந்த சான்திழில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கையெழுத்திடலாம் என்று வாதிட்டார்.
அதைத்தொடர்ந்து நீதிபதி எம். கோவிந்தராஜ் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு தடை இல்லை என உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாளை திட்டமிட்டபடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.