சென்னை
சென்னைஅண்ணனூர் ரெயில் நிலையத்துக்குள் செல்ல மேம்பாலமோ சுரங்கப்பாதையோ இல்லாததால் மக்கள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான மத்திய நிதிநிலை அறிக்கையில் அதிகம் மக்கள் கூடும் ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுக்கள் எனப்படும் எஸ்கலேட்டர் அமைக்கப் படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ரெயில் நிலையங்களில் சென்னை ஆவடியும் ஒன்றாகும். இது குறித்து ஆவடிக்கு மிக அருகில் உள்ள அண்ணனூர் ரெயில்வே நிலையத்தை உபயோகிக்கும் பயணிகள் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் “ஆவடிக்கு எஸ்கலேட்டர் அமைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். செண்ட்ரலுக்கு வரும் போது ஆவடிக்கு அடுத்ததாக உள்ள அண்ணனூர் ரெயில் நிலையம் உள்ளது. தினமும் காலையும் மாலையும் இங்கு கூட்டம் அதிகமாக உள்ளது வழக்கம். தவிர பல விரைவு ரெயில்கள் இந்த நிலையத்தின் வழியாக செல்கிறது.
ஆனால் மக்கள் ரெயில் நிலையத்துக்குள் வரவும், வெளியே செல்லவும், மேம்பாலமோ சுரங்கப் பாதையோ கிடையாது. மக்கள் தண்டவாளத்தை கடந்து நடந்து வருகின்றனர். இதனால் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ரெயில்வேத் துறைக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் ஒன்றும் நடைபெறவில்லை.
அதே நேரத்தில் ரெயில் நிலையத்தின் இருபக்கங்களிலும் தண்டவாளத்தை கடப்பதினால் உயிரிழப்பு ஏற்படும் என எச்சரிக்கைப் பலகைகள் வைத்துள்ளனர். நாங்கள் தண்டவாளத்தையும் கடக்கக் கூடாது, மேம்பாலமோ சுரங்கப் பாதையோ கிடையாது என்றால் ரெயில்நிலையத்துக்குள் எப்படி நுழைவது? அல்லது எப்படி ரெயில்நிலையத்தில் இருந்து வெளியேறுவது” என தங்கள் குறைகளை கூறி உள்ளனர்