பெங்களூரு

பெங்களூரு மெட்ரோ போர்டுகளில் இந்தி மொழி இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதற்காக நடந்த விவாதத்தில் எந்த ஒரு முடிவும் எட்டவில்லை.

பெங்களூரு மெட்ரோவின் போர்டுகளில் இந்தி மொழி இருப்பதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பு உள்ளது.   கன்னடர்கள், “நம்ம மெட்ரோ ஹிந்தி பேடா” என அந்த எதிர்ப்புக்கு பெயரும் சூட்டியுள்ளனர். இதற்கு நமது மெட்ரோவில் இந்தி வேண்டாம் என பொருள்.   கடந்த ஞாயிறு அன்று எதிர்ப்பாளிகள், மெஜஸ்டிக் மற்றும் சிக்பேட் மெட்ரோ நிலைய போர்டுகளில் உள்ள இந்தி எழுத்துக்களை காகிதம் ஒட்டி மறைத்தனர்.

இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசும் கர்நாடகா அரசும் முடிவு காண ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தன.  அதில் மத்திய அரசின் அமைச்சர் சதானந்த கவுடாவும்,  கர்நாடக அமைச்சர் ஜார்ஜும் கலந்துக் கொண்டார்கள்.  மற்றும் பல பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.

”ஒரு மத்திய அமைச்சர் என்னும் முறையில் நான் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன்.  மாநில மொழி கன்னடத்துக்கு முதலிடமும், பல மாநிலங்களில் பேசப்படும் இந்திக்கு இரண்டாம் இடமும், சர்வதேச மொழியான ஆங்கிலத்துக்கு மூன்றாம் இடமும் அளிக்கப்பட வேண்டும். என சதானந்த கவுடா கருத்தை தெரிவித்தார்.

ஆனால் ஜார்ஜ், “இது கன்னட நாடு, எனவே கன்னடத்துக்கு முதலிடமும்,  பல நாட்டு, மற்றும் பல மாநில மக்கள் இங்கு வசிப்பதால் ஆங்கிலமும் தேவை.   வேற்று மொழி பேசும் மக்களுக்காக ஆங்கிலத்தை அனுமதிக்கலாம்.  இந்தி தேவை இல்லை” எனக் கூறினார்.

இரு தரப்பிலும் மாறி, மாறி தங்களின் கருத்தை வைத்த போதிலும், இரு தரப்பினருமே விட்டுக் கொடுக்க தயாரில்லை.  எனவே பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.