போலிம், கோவா

கோவா விமான நிலைய இயக்குனருக்கு காங்கிரசை சேர்ந்த ஒரு இளைஞர் தனது திருமண வரவேற்பை விமான நிலையத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பம் அளித்துள்ளார்.

டபோலிம் விமான நிலையத்தினுள் சமீபத்தில் அமித்ஷா கலந்துக் கொண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது தெரிந்ததே.  இதையொட்டி காங்கிரசை சேர்ந்த இளைஞர் ஜனார்த்தன் பண்டாரி, தனது திருமண வரவேற்பை டபோலிம் விமான நிலையத்தில் நடத்த அனுமதி கோரி விமான நிலைய இயக்குனர் பி. எஸ். நேகியிடம் விண்ணப்பித்துள்ளார்.

அந்த விண்ணப்பத்தில் அவர், “நான் கானகோனா பகுதியை சேர்ந்தவன்.  எனக்கு, கன்கோலிம் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளது.  எங்கள் இருவரின் குடும்பத்தினரும் திருமணம், மற்றும் வரவேற்பை நிகழ்த்த பொருத்தமான இடம் தேடி எங்கும் கிடைக்கவில்லை.  இறுதியில் விமான நிலையம் பொருத்தமாக இருக்கும் எனக் கண்டறிந்தோம்.  எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து 3 வருடங்களாகியும் திருமணம் நடத்த சரியான இடம் கிடைக்காததால் எனது திருமணம் தள்ளிப்போகிறது.   இனி அது தள்ளிப்போகாது என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அவரது விண்ணப்பத்தில் உள்ள மற்ற முக்கிய வாசகங்கள் இதோ :

“இரு வீட்டாருக்கும் வந்து போக சவுகரியமான இடம் விமான நிலையம்.

பல மாநிலங்களில் இருந்து வரும் விருந்தினர்கள் இந்த விமான நிலையத்தில் தான் வந்து இறங்குவார்கள்.

அதிகாரிகள் சொல்லும் தேதியில் விழாவினை வைத்துக் கொள்ள இருவீட்டாருக்கும் சம்மதம்.

நானோ, மற்றவர்களோ எந்த ஒரு பாதுகாப்பையும் மீற மாட்டோம்.

புகைப்படம், மற்றும் வீடியோ எடுக்கப்பட மாட்டாது,

மைக்குகள் அமைக்கும் அனுமதியையும் நாங்களே வாங்கிக் கொள்கிறோம்.

அமித்ஷாவின் பொதுக்கூட்டம் நடக்க அனுமதித்தமைக்கு நன்றி;

அதன் மூலம் தான் இவ்வளவு பெரிய ஹால் உள்ளதே என்னை போல மக்களுக்கு தெரிய வந்துள்ளது.”

என குறிப்பிட்டு அனுமதி கேட்டுள்ளார்.