சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவது, பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள்தான். இந்த 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்டும் தண்ணீரே சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த வரிசையில் தற்போது கடந்த வாரம் அமித்ஷாவால் திறக்கப்பட்ட கண்ணன் கோட்டை தேர்வாய்க்கண்டிகை ஏரியும் இப்போது சேர்ந்துள்ளது. இது மட்டுமின்றி, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து வாய்க்கால் மூலம் கிருஷ்ணா நீரும், கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து பிரம்மாண்ட குழாய் மூலம் காவிரி நீரும் கொண்டு வரப்படுகின்றன. தற்போதைய நிலையில், இந்தஏரிகள் அனைத்தும் ஓரளவுக்கு நிரம்பி உள்ளன.
இன்று (27/11/2020ஸ்ரீ) காலை நிலவரப்படி 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி (11.25 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் 8 ஆயிரத்து 490 மில்லியன் கன அடி (8.5 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3 ஆயிரத்து 245 மில்லியன் கன அடி (3.24 டி.எம்.சி.) நீர் மட்டுமே இருந்தது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. தற்போது உள்ள நீரின் கொள்ளளவு 2,214 மில்லியன் கன அடியாகவும், ஏரிக்கு நீர் வரத்து 2,527 கனஅடியாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் 967 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்தது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடி. தற்போது உள்ள நீரின் கொள்ளளவு 310 மில்லியன் கன அடியாகவும், ஏரிக்கு நீர் வரத்து 764 கனஅடியாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் 99 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்தது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. தற்போது உள்ள நீரின் கொள்ளளவு 2,790 மில்லியன் கன அடியாகவும், ஏரிக்கு நீர் வரத்து 925 கனஅடியாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் 1528 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. தற்போது நீரின் கொள்ளளவு 3,176 மில்லியன் கன அடியாகவும், ஏரிக்கு நீர்வரத்து 1730 கனஅடியாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் 651 மல்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்தது.
தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. தற்போது நீரின் கொள்ளளவு 170 மில்லியன் கன அடியாக உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் இந்த ஏரிகளில் நீர் இருப்பு 8.66 டிஎம்சிக்கு (8,660 மில்லியன் கனஅடி) அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை மற்றும் சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சராசரியாக மாதம் ஒரு டி.எம்.சி. என்ற அடிப்படையில் தேவை இருக்கும் போது, தற்போது இருக்கும் நீர் சராசரியாக 9 மாத தேவையை பூர்த்தி செய்ய முடியும். இருந்தாலும் வரும் நாட்களிலும் மழை தொடரும் என்பதால் ஏரிகளின் நீர் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கனஅடி. இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 88 மிமீ மழை பதிவானது. தற்போது 826 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து கடந்த செப்டம்பர் 18–ந் தேதி கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது. நேற்று தமிழக – ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டையில் விநாடிக்கு 548 கனஅடி வீதம் கிருஷ்ணா நீர் வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.380 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். இந்த நீர்தேக்கத்தின் கொள்ளளவு 500 மில்லியன் கனஅடியாகும். இன்று அந்த நீர்தேக்கத்தில் 170 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
இதன் காரணமாக அடுத்த சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.