பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழிக்க மோடி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வீண்போகவில்லை என்பதை இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்று நாள் யுத்தத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடியின் உரை தொலைக்காட்சி மூலம் இன்று மாலை ஒளிபரப்பப்பட்டது.

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலை அடுத்து தனது சவுதி அரேபிய பயணத்தை பாதியில் ரத்து செய்து இந்தியா திரும்பிய பிரதமர், “பயங்கரவாதிகள் உலகின் எந்தமூலையில் இருந்தாலும் விடமாட்டேன், அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன்” என்றும் மறுநாள் பீகார் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சூளுரைத்தார்.
இதனையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட புறக்கணித்து விட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த தொடர் ஆலோசனைகளின் முடிவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இடியை பாகிஸ்தான் மீது இறக்கியதோடு அதற்கு ஏன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டது என்ற காரணத்தையும் அவர் விளக்கியது பின்னர் ஊடகங்கள் மூலம் தெரியவந்தது.
மே 7ம் தேதி இரவு ஆபரேஷன் சிந்தூரின் முதல் கட்ட நடவடிக்கையாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களின் தரவுகளைக் கொண்டு அவற்றை குறிவைத்து தாக்கி அழித்தது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 15 நாட்கள் கழித்து நடைபெற்ற இந்த இந்திய தாக்குதலை சற்றும் எதிர்பாராமல் திணறிய பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று கொக்கரித்தது.
இதனைத் தொடர்ந்து மே 8 ம் தேதி இந்திய எல்லையில் உள்ள நிலைகள் மீது டிரோன் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் மே 9ம் தேதி அதன் வசம் இருந்த ராணுவ தளவாடங்களைக் கொண்டு ஜெய்சல்மர் வரை குண்டு வீசி சென்றதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது.
பாகிஸ்தான் தாக்குதலை எதிர்கொள்ள இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்த போதும், ஒரு கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வந்த இந்திய ராணுவம் இந்த தாக்குதல்களை திறம்பட முறியடித்தது.
அதேவேளையில் ஜெய்சல்மர் வரை வந்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்ட பாகிஸ்தானின் காலை உடைக்க நினைத்த மத்திய அரசு டெல்லியில் பிரதமர் தலைமையில் மீண்டும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது.
இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதை உணர்ந்த உலக நாடுகள் இதனால் வாயடைத்து போயின. தவிர, இந்தியாவுடன் உரசுவதையே வாடிக்கையாகக் கொண்ட பாகிஸ்தான் அச்சத்தில் உறைந்து நின்றது.
இதையடுத்து இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை (டிஜிஎம்ஓ) மே 10ம் தேதி மாலை 3:35 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் டிஜிஎம்ஓ போர் நிறுத்தம் குறித்து அறிவித்தார்.
எல்லைக்கு அப்பால் இருந்து வந்த இந்த கோரிக்கையை ஏற்று தனது ஆவேசத்தை குறைத்த மத்திய அரசு போரை நிறுத்த சம்மதித்ததை அடுத்து அன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் அறிவித்தார்.
அதேவேளையில் பாகிஸ்தானின் இந்த போர் நிறுத்தம் என்ற பேச்சுக்குப் பின் வேறு திட்டங்கள் இருக்கக்கூடும் என்று யூகிக்கும் இந்திய அரசு, பாகிஸ்தான் மீண்டும் இதேபோல் தீவிரவாத தாக்குதலில் இறங்கினால் அது போராக கருதப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பாகிஸ்தானின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வரும் பிரதமர் மோடி அடுத்த சில நாட்களுக்கு தனது கண்காணிப்பை தொடர்வார் என்று நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.