சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று என்று புனே மற்றும் சென்னை ஆய்வக முடிவுகளை சுட்டிக்காட்டி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெளிவுபடுத்தினார்.
உலக நாடுகளை பயமுறுத்தி வரும் கொரோனா ஆட்கொல்லி வைரஸ் பல நாடுகளுக்கு பரவி உள்ள நிலையில், இந்தியாவிலும் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், சந்தேக நபர்களின் ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு புனே மற்றும் சென்னையில் உள்ள கிங்ஸ் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அவை அனைத்தும் நெகடிவ் என்றே வந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், சீனாவில் இருந்து விமானத்தில் வரக்கூடிய பயணிகள் பயன்படுத்த, விமான நிலையத்தில், தனி நகரும் படிக்கட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ மனையில், தனி வார்டுகளுக்கு என்று 228 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர், சந்தேகப்படும் நபர்களை தனி வார்டுகளில் பரிசோதனை செய்து வருவதாகவும் கூறினார்.