சென்னை:
மிழக அரசைப் பொறுத்தவரை மக்கள் கட்டாயம் இ பாஸ் எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால், முழுஅடைப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இ பாஸ் ஆணையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி:
உள் மாநிலங்கள் மற்றும் மாநில எல்லையை கடந்து வெளி மாநிலங்களில் வர்த்தகம் செய்வோருக்கு எந்தவித தடையும் இருக்காது, இவர்கள் எவ்வித அனுமதியோ/ ஒப்புதலோ/ இ பாஸோ பெற வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்திருந்தது.

ஆனால் அதனைத் தொடர்ந்து: மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் தங்களுடைய நிலைமையை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் சில நடவடிக்கைகளை தளர்வு செய்யலாம் அல்லது அவசியம் ஏற்பட்டால் தங்களுடைய இடத்திற்கு ஏற்ப இதனை மாற்றி அமைக்கலாம் என்று அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சில ஊடகங்களில் இ பாஸ் ரத்து செய்யப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது, மேலும் சிலர் இதனால் இனி இ பாஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்காது என்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இருப்பினும் தமிழக அரசைப் பொறுத்தவரை, மக்கள் பயணிப்பதற்கு கட்டாயம் இ பாஸ் எடுக்க வேண்டும் என்றும், இது நம் மாநிலம் விதிக்கும் கட்டுப்பாடு என்றும் தலைமை செயலாளர் கே. சண்முகம் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு அதிகாரி இதைப்பற்றி தெரிவித்ததாவது:  முழு அடைப்பில் நிலைமை மற்றும் விதிமுறைகளை மத்திய அமைச்சகம் அனுமதித்ததை விட கடுமையாக மாற்றுவதற்கு மாநில அரசுக்கு அனுமதி உண்டு, ஆனால் மத்திய அரசின் விதிமுறைகளை மீறி தளர்த்துவது தான் கூடாது என்று தெரிவித்துள்ளார்.