ஐதராபாத்
நகரின் முக்கியமான இடத்தில் காரை ஒட்டி ஒருவரைக் கொன்று விட்டு ஓடிவிட்ட ஒரு வாகனத்தை கண்டுபிடிக்க சிசிடிவி பதிவுகள் இல்லாததை எதிர்த்து இறந்தவரின் மகள் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஐதராபாத் நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது தந்தை ஒரு யோகா ஆசிரியர். தினமும் காலையில் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் யோகா வகுப்பு நடத்த 5 மணிக்குச் செல்வது வழக்கம். இதே போல கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி கிளம்பி உள்ளார். அன்று நடந்த சம்பவம் ரேணுகாவை கடும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அது பற்றி ரேணுகா தெரிவித்ததாவது :
“என் தந்தை வகுப்பு எடுக்கும் ஆட்லைஃப் பில்டிங் எங்கள் வீட்டின் அருகே உள்ளது. அதனால் காலை 5 மணிக்கு கிளம்பும் என் தந்தை எப்போதாவது வாடகை வாகனத்திலும், பொதுவாக நடந்தும் செல்வார். அன்றும் (ஆகஸ்ட் 2) அதே போல நடந்து சென்றுள்ளார். அவர் கே பி ஆர் பார்க் ஜங்க்ஷன் அருகே என் டி ஆர் பவனுக்கு முன்பு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது தவறான திசையில் வந்த ஒரு கார் அவர் மீது வேகமாக மோதியது. நிலை தடுமாறிய அவர் தனக்குப் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மேல் விழுந்தார். அதனால் அந்த பைக் ஓட்டி வந்தவருக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த கார் அவரை மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கும் அவர் வீட்டுக்கும் தகவல் தெரிவித்தனர்.
நாங்கள் அங்கு வந்து சேர இருபது நிமிடங்கள் ஆகி விட்டன. ஆம்புலன்சும் வந்தது. மாதப்பூரில் உள்ள மாக்ஸ்க்யூர் மருத்துவமனையில் அவரை சேர்த்தோம். ஆனால் அவருக்கு மூளையில் அடிபட்டதால் காதிலிருந்து நிற்காமல் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. முதலில் அவர் மூளைச்சாவு நிலைக்கு சென்று விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் பின் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். சிகிச்சை பலனின்றி என் தந்தை இறந்து போனார்.
இது அத்துடன் முடிந்து விடவில்லை. அன்று மாலை என் கணவர் பஞ்சாரா ஹில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அங்கு விபத்து நடந்த நேரத்தைய சிசிடிவி பதிவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. நகரின் முக்கிய பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகள் எவ்வாறு இல்லாமல் போகும் என்னும் சந்தேகம் எனக்கு எழுந்தது.
சுற்றிலும் பல முக்கியமானவர்களின் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பல கட்டிடங்கள் இருக்கும் போது எங்கும் அந்த விபத்து நடந்த நேரத்தின் வீடியோ பதிவு கிடைக்கவில்லை என்பது என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாங்களும் பக்கத்தில் இருந்த பல இடங்களிலும் விசாரித்தோம். அனைவரும் தங்கள் சிசிடிவி இரண்டு மூன்று நாட்களாக வேலை செய்வதில்லை என்றே கூறுகிறார்கள். எங்களுக்கு கிடைத்த ஒரு சில பதிவுகளிலும் அந்த கார் தென்படவில்லை. மோதியதும் ஏதோ சந்துகளுக்குள் புகுந்து அவர்கள் தப்பி இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.
என் தந்தைக்குப் பின் வந்த பைக் ஓட்டியவரும் வண்டி எண்ணை தான் பார்க்கவில்லை என்றும் இந்த அதிர்ச்சியால் தனக்கு ஒன்றும் தோன்றவில்லை எனவும் கூறுகிறார். எனவே என் தந்தையின் மரணத்துக்கு நீதி கிடைக்க, அந்த விபத்தை பார்த்தவர்கள் யாராவது விவரம் தெரிவித்து எனக்கு உதவ வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
பஞ்சாரா ஹில் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள காவல் அதிகாரி, “நாங்கள் அந்த வண்டியை கண்டுபிடிக்க முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வண்டி கிடைத்த பின்பு தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.