டி.வி.எஸ். சோமு அவர்களின் முகநூல் பதிவு:
பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நண்பர், “நான் பொருளாதார ரீதியாக வளர்ந்துவிட்டதால் இட ஒதுக்கீட்டு சலுகை தேவையில்லை. என் பிள்ளைக்கு சாதி மதமில்லை என்று குறிப்பிட்டே பள்ளியில் சேர்க்கப்போகிறேன். இதனால் சாதி மதம் ஒழிந்துவிடும். இந்த சமுதாயத்துக்கு என்னாலான உதவி!” என்றார் பெருமையான தொனியில்.
இன்னொரு நண்பர், “மே,ஜூன் மாதம் வந்தாலே. இப்படி “புரட்சி” பேசுவது சிலருக்கு ஃபேஷன் ஆகிவிட்டது. இது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம்!” என்றார் பட்டென்று. மேலும் அவர்,
“ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தவர்களுக்கு அளிக்கப்படும் உரிமைதான் இட ஒதுக்கீடு. அது சலுகை அல்ல!
இது பொருளாதாரத்தின் அடிப்படையிலானதும் அல்ல. சமூக ரீதியானது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்களை , தங்களுக்குச் சமமானவர் என்று முற்பட்ட வகுப்பினர் ஒப்புக்கொள்கிறார்களா…. ?
தவிர இன்று இவரது பொருளாதாரம் வளமாக இருக்கலாம். இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என உத்திரவாதம் உண்டா? அப்படி இல்லாமல் இவரது பொருளாதாரம் கீழ் நிலைக்குச் சென்றுவிட்டால், அப்போது மீண்டும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற வழி உண்டா? கிடையாது!
சாதி வெறி நிலவுவது இந்த சமுதாயத்தில்தான். பள்ளி சான்றிதழ்களில் அல்ல. அதாவது, சமுதாயத்தில் நிலவி வரும், சாதி (சாதீய ஏற்றத்தாழ்வு) என்பது நோய். . அந்த நோயைப் போக்கும் மருந்துதான், சாதிவாரி இட ஒதுக்கீடு.
“தலைவலி தைலத்திலேயே தலைவலி என்கிற வார்த்தை இருக்கிறது. ஆகவே தலைவலிக்குக் காரணமே, அந்த தைலம்தான்” என்பது எந்த அளவுக்கு அறியாமையோ, அதேபோலத்தான் சாதிவாரி ஒதுக்கீட்டுக்காக கல்விச்சாலையில் பெறப்படும் சாதி பற்றிய தகவல்களை எதிர்ப்பதும்.
சமுதாயத்தில் முளைத்து கிளத்து நிற்கும் சாதியை ஒழித்துவிட்டால் கல்விச்சாலையில் ஏன் சாதி தேவைப்படப்போகிறது? அதற்காகப் போராடுவோம்!
உண்மையிலேயே சாதி ஒழிப்பில் தீவிரமாக இருப்பவர்…
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றால் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து தங்களது வாரிசுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள். தாழ்த்தப்பட்டவர்களானால் அதிலும் தாழ்த்தப்பட்டிருக்கும் புதிரை வண்ணார், அருந்ததியினர் இனத்திலிருந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள். சாதியை ஒழிக்கும் மிகச் சரியான வழி இதுதான்.
கல்விச் சாலைகளில் சாதியைக் குறிப்பிடுவதைத் தடுக்க இன்னொன்று செய்யலாம். குறிப்பிட்ட சாதி என்பதை எழுதாமல், பிற்படுத்தப்பட்டவர், மிக பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், அட்டவணை இனத்தவர் என்று மட்டுமே குறிக்க வேண்டும் என அரசை வலியுறுத்தலாம். அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தலாம். இதுதான் சாதியை பள்ளியிலிருந்து அகற்ற சரியான வழி.
தற்போதைக்கு இன்னொரு வழி இருக்கிறது. உரிய சாதிச் சான்றதழை முறையாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லை என்கிற நிலையில் பயன்படுத்தாதீர்கள். கல்லூரி அல்லது வேலைக்கு சேர முயற்சிக்கும்போது, சாதிச் சான்றிதழை இணைக்காமல் அனுப்புங்கள். அப்போது இட ஒதுக்கீட்டு உரிமை கிடைக்காது. இதுதான் சரி.
ஒட்டுமொத்தமாக என் பிள்ளைக்கு சாதிச் சான்றிதழ் வேண்டாம். ஒதுக்கீட்டு உரிமை வேண்டாம் என்பது – உங்கள் வாரிசாக இருந்தாலும்- அடுத்தவர் உரிமையைப் பறிப்பதே ஆகும்.
இது முட்டாள்த்தனம் மட்டுமல்ல… அயோக்கியத்தனமும்கூட!”
என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் நண்பர்.