சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதிமுக பொது குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் வியாழக்கிழமை (ஜூலை 7ந்தேதி)  விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து  வெள்ளிக்கிழமை (ஜூலை 8) விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் இருக்கிறது, காலாவதியாகவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் கொடுக்க முடியும் என்றும், அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என்று கட்சி விதி கூறுகிறது. எனவே, தலைமைக் கழக நிர்வாகிகள் பதவியில் நீடிக்கிறார்கள். 2665 பொதுக் குழு உறுப்பினர்களில் 2190 பேர் பொதுக்குழுவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 82 சதவீதம் பேர் ஒப்புதல் அளித்திருப்பதால், பொதுக்குழுவுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று, ஜூன் 23-ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பான செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று மனுதாரா் மனுவைத் தாக்கல் செய்த நாள் வரை, பொதுக் குழு தொடா்பான அறிவிப்பு வெளியிட்டு 13 நாள்கள் முடிவடைந்துள்ளது. எனவே, கூட்டம் தொடா்பாக நோட்டீஸ் கொடுக்கவில்லை என கருதக் கூடாது. பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கூடாது’ என வாதிடப்பட்டது.

இந்த வழக்கின் இருதரப்பினரின் காரசாரமான விவாதங்களைத் தொடர்ந்து, நீதிபதி திங்கட்கிழமை (11ந்தேதி)  காலை 9மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா என கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்,  இன்று காலை 9மணிக்கு நீதிமன்றம் தொடங்கியதும், அதிமுக பொதுக்குழு கூட தடை இல்லை என  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை? போலீஸ் பாதுகாப்புடன் கட்சி அலுவலகம் வந்தார் ஓபிஸ்…