ஷார்ஜா: காலை கோட்டிற்கு(crease) வெளியே வைத்து போடப்படும் செல்லாத பந்துகளை(no ball) இனி தொலைக்காட்சி நடுவரே(tv umpire) கண்டறிந்து தெரிவிக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அடுத்து வரவுள்ள 6 மாதங்களுக்கு பல ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் நடத்தப்பெற்று, அதன்மூலம் மூன்றாவது நடுவரே கண்டறியும் முறையானது பலமுறை சோதித்தறியப்படும்.

கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் – இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த ஒருநாள் தொடரில் இந்த நடைமுறை சோதித்துப் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அந்தப் பரிசோதனை பெரிய மற்றும் பரந்தளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார் ஐசிசி அமைப்பின் பொது மேலாளர் ஜியோஃப் அலார்டைஸ்.

ஒரு பந்து போடப்பட்ட சில விநாடிகளில், அதன் படங்கள் மூன்றாவது நடுவருக்கு சென்றடைந்துவிடும். அவர் அதை சோதித்துவிட்டு, கள நடுவருக்கு தெரிவித்துவிடுவார். இதன்மூலம் ஒவ்வொரு பந்தும் முறையாக வீசப்படுவதை உறுதிசெய்ய முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. கோட்டிற்கு வெளியே காலை வைத்துப் போடப்படும் பந்துகளுக்கு மட்டுமே இந்த நடைமுறை என்பது கவனிக்கத்தக்கது.