வாஷிங்டன்
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு சிறையில் வீட்டு உணவு, ஏசி மற்றும் டிவி வசதிகள் அளிக்கப்படவில்லை என பாக் பிரதமர் இம்ரான் கான தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் சென்றுள்ளார். அவர் அங்குள்ள பாகிஸ்தானியர்களிடம் ஒன் அரேனா அரங்கில் உரையாடினார். அந்த அரங்கின் கொள்ளளவான 20000 பேரையும் மீறி அங்கு 30000 பேர் கூடி இருந்தனர். அவர் அங்கு சுமார் 50 நிமிடம் உரையாற்றி உள்ளார்.
அவர் தனது உரையின் போது, “அல் அஜியா ஸ்டீல் மில் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு கிரிமினல் குற்றவாளி ஆவார் அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகள் தவறானவை ஆகும். அவருக்குச் சிறையில் ஏசி, வீட்டு உணவு, டிவி போன்ற எவ்வித வசதிகளும் அளிக்கப்படவில்லை.
அவர் சார்பில் இந்த வசதிகள் கேட்கப் பட்டது. ஆனால் இவ்வித வசதிகளை அளித்தால் அது எவ்வாறு சிறைத் தண்டனை ஆகும்? பாகிஸ்தான் மக்களில் பெரும்பாலான மக்களுக்கு இவ்வித வசதிகள் கிடையாது. அவ்விதம் இருக்கையில் ஒரு கிரிமினலுக்கு எவ்வாறு இந்த வசதிகள் அளிக்க முடியும்?” எனக் கூறி உள்ளார்.