நெய்வேலி: என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்று முதல் பயிர் இழப்பீடு தொகை விநியோகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் நெய்வேலி சிறப்பு துணை ஆட்சியரிடம் காசோலையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி  நிர்வாகம் சுரங்க விரிவாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கடந்த 2007ம் ஆண்டே கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை விலைகொடுத்து வாங்கி கையப்படுத்தியது. ஆனால், அதை சுற்றி வேலி அமைக்காமல் இருந்ததால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் அதில் பயிர்களை விளைவித்து வந்தனர். இந்த நிலையில், என்எல்சி சுரங்கத்தில் இருந்து நீரை வெளியேற்றும் வகையில், அந்த பகுதியில் காவல்வாய் அமைக்கும் பணியை என்எல்சி தொடங்கியது. இது குறித்து முன்கூட்டியே எச்சரித்தும், விவசாயிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, என்எல்சி நிர்வாகம், பயிர்களை அழித்துவிட்டு அதன்வழியாக கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுக்க பாமக தனது பங்குக்கு வன்முறையை கையில் எடுத்து மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில், ல் பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என கோரிக்கையை வைத்தார். விசாரணையைத் தொடர்ந்து,  சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், என்எல்சிக்கும் உத்தரவிட்ட நிலையில், அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் ,உத்தரவாதம் வழங்க வேண்டும் என கூறி விசாரணை ஒத்தி வைத்தது.

அத்துடன் இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் தவறு செய்துள்ளதால் ஏக்கருக்கு ரூபாய் 40ஆயிரம் இழப்பீட்டு தொகையாக நிர்ணயிக்கப்பட்டு, இந்த இழப்பீடு தொகையை வரும் 6ம் தேதிக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று என்எல்சி நிர்வாகத்துக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து,  பரவனாறு நிரந்தர மாற்றுப்பாதை அமைக்கும் பணியின்போது சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு இன்று முதல் இழப்பீடு வழங்கப்படுகிறது. நெய்வேலி சிறப்பு துணை ஆட்சியரிடம் காசோலையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.