ஐதராபாத்: பிரிட்டனின் நாட்வெஸ்ட் வங்கியில் கடந்த 1948ம் ஆண்டு முதல் இருந்துவரும் ரூ.306 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்தியா மற்றும ஐதராபாத் நிஜாமின் வாரிசுகளுக்குச் சொந்தமானது என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் வணிகம் மற்றும் சொத்து நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளது.
இதன்மூலம், தற்போது நிஜாமின் 120க்கும் மேற்பட்ட வாரிசுகளிடையே அந்த சொத்துக்கள் எப்படி பகிர்ந்தளிக்கப்படும் என்ற விவாதம் எழுந்துள்ளது.
ஐதராபாத்தின் கடைசி நிஜாமாக இருந்தவர் மீர் உஸ்மான் அலி கான்.
ஐதராபாத் நிதி என்றழைக்கப்படும் இந்த நிதியின் உரிமைகோரல் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது மற்றும் இந்த விஷயம் இரு நாடுகளுக்கான ஒரு கவுரவப் பிரச்சினையாகவும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் தீர்ப்பானது இந்திய தரப்பிற்கு ஆதரவாக வந்துள்ளது.
இந்த சொத்தில் இந்திய அரசும் தனது பங்கினை எடுத்துக்கொள்ளுமா? என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. நிஜாம் எஸ்டேட் என்றழைக்கப்படும் அமைப்பில் உறுப்புத்துவம் பெற்றுள்ள 120க்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு இந்த பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
நிஜாமின் பேரன்களுள் ஒருவரான நஜாஃப் அலி கான், இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டவர். அவர் நிஜாம் குடும்ப நல சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
நிஜாமின் வாரிசுகளில் பலர் தற்போது தங்களின் அடிப்படைத் தேவைகளையே ஈடுசெய்ய முடியாத அளவிற்கு கடும் வறுமையில் உள்ளனர். எனவே, பிரிட்டன் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.