சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். அப்போது 155 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துவந்த புயல், தற்போது 11 கி.மீ வேகத்தல் நகர்ந்து வருவதாகவும், புயலின் வேகம் அதிகரித்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. புயலானது, கடலூரிலிருந்து 240 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 250 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை இல்லாத அளவாக இது கடுமையான சூறாவளி புயலாக 145 கி.மீ வேகத்தில் வீச இருப்பதாகவும், கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தமிழ்நாடு தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.