சென்னை: நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், இரவு 8மணிக்கு பிறகு புயலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்றும், புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் அதன் தாக்கம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலின் தற்போதைய நிலவரம் குறித்து தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் இன்று மாலை, 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நிவர் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 11 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
அதிதீவிர புயலாக மாறியுள்ள நிவர் புயலின் தீவிரம் இன்று இரவு 8 மணி முதல் அதிகரிக்கும் , வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்கக்கூடும் என்றும், அதன் ஒரு பகுதி இன்று இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கும் என்றவர், அதன் மையப்பகுதி கரையை கடக்க சுமார் 2.5 மணி நேரம் ஆகும் என தெரிவித்தார்.
மேலும், புயல் கரையை கடந்த பிறகு, கடலோர மாவட்டங்களில் அதன் தாக்கம் 6 மணி நேரத்துக்கு நீடிக்கும். இதன் காரணமாக, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளையும் பலத்த மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நாளை காலை முதல் பிற்பகல் வரை மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.
இந்த பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக, குடிசை வீடுகள் பாதிக்கப்படலாம், விளம்பர பலகைகள் பாதிக்கப்படலாம், மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு பாதிக்கப்படலாம் என்று கூறியவர், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழல் கூடிய நிலை ஏற்படும், அரசு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வழங்கும் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.