சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று 3வது நாளாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள்து. சென்னை அண்ணாசாலை தர்கா கூரை சாய்ந்து விழுந்தது. மேலும் பல இடங்களில் மரங்களும், சாலையோர பேனர்களும் காற்றினால் சரிந்து விழுந்துள்ளது. இதனால் சில இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
நிவர் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை உள்பட கடற்கரையோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசுவதால், ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிற்பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.
முன்னதாக நேற்று இரவு பல இடங்களில் பேனர்கள், மரங்கள் சரிந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தின. இன்று காலை வீசிய பலத்த காற்றில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல தர்காவின் கூரை சரிந்து விழுந்தது.
மேலும், தொடர்மழை காரணணமாக சென்னை அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இன்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால், மேலும் வெள்ளம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. தற்போதைய நிலையில், சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முடிச்சூரில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.