சென்னை: நிவர் புயலால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன்பின் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுவைக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையில் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வு வேகம் 13 கி.மீட்டராக குறைந்துள்ளதால்,  புயல்  கரையை நடக்க காலதாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்க உள்ளதாக பேரிடர் மீட்புப்படை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்,  நிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக 770 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 426 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு காரணமாக ஏற்படும் எந்தவொரு  சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.