அது வேற வாய்.. இது வேற வாய்.. நிதிஷ்குமார் அடித்த பல்டி ..
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து xகூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார், ஐக்கிய ஜனதா தளம் தலைவர், நிதிஷ்குமார்.
அவரே, முதல்வர்.
ஊரடங்கு விதி முறைகளை உத்தரப்பிரதேச பா.ஜ.க.முதல்வர் யோகி ஆதித்ய நாத் மீறியுள்ளதாக இரு நாட்களுக்கு முன் குற்றம் சாட்டி இருந்தார், நிதீஷ்.
என்ன மீறல்?
ராஜஸ்தான் மாநிலம் ’கோடா ’நகரில், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 7 ஆயிரத்து 500 மாணவர்கள் டியூசன் படிக்க சென்ற நேரத்தில் அங்கு மாட்டிக்கொண்டனர்.
அவர்களை ஸ்பெஷல் பேருந்துகளை அனுப்பி மீட்டு வர ஏற்பாடு செய்தார், யோகி.
இதனைக் கண்டித்து இருந்தார், நிதீஷ்.
‘’ எத்தனையோ தொழிலாளர்கள், ஆங்காங்கே மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். இந்த நிலையில் உ.பி. மாணவர்களுக்கு மட்டும் மீட்பது, விதிகளை மீறும் செயல்’’ என்று கூறி இருந்தார்.
உ.பி.யை போல், பீகார் மாநில மாணவர்களும், ‘கோடா’ நகரில் சிக்கியுள்ளனர்.
‘’யோகி போன்று, ‘ஸ்பெஷல்’ கவனம் செலுத்தி பீகார் மாணவர்களை மீட்டு வர வேண்டும்’’ என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
‘அதெல்லாம் முடியாது’’ என்று கை விரித்து விட்டார், நிதிஷ்குமார்.
ஆனால், பீகார் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒருவரின் மகளைக் கோடா நகரில் இருந்து, மீட்டு வர நீதிஷ் அரசு உதவி செய்துள்ளது.
பீகார் மாநில அரசு வழங்கிய சிறப்பு அனுமதிச் சீட்டை வைத்துக்கொண்டு, அந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் மகள் ராஜஸ்தானில் இருந்து, பீகாருக்குப் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளார்.
‘’ ஏன் இந்த இரட்டை வேடம்?’’ என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளன, எதிர்க்கட்சிகள்.
‘’ அது நேத்து.. இது இன்னைக்கு’’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டிருக்கிறார், நிதீஷ்.
– ஏழுமலை வெங்கடேசன்