பாட்னா: அரசியல் வரலாற்றில் தனது பதவிகளை காப்பாற்றிக்கொள்ள அரசியல்வாதிகள் கட்சி மாறுவது வழக்கம். அதுபோல, பதவியையும், ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்வதில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னிலையில் உள்ளார். இதுவரை பல முறை கூட்டணியை மாற்றி ஆட்சி அமைத்துள்ள நிதிஷ், தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தள கட்சி விலகிய நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து 9ஆவது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்.
தேசிய அளவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதவி ஆசையில் அவ்வப்போது கூட்டணியை மாற்றி வந்த நிலையில், தற்போது மீண்டும் பாஜவுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார். தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை. இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை
அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் இன்று காலை 10 மணிக்கு பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப்பேசினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். இதற்கிடையே பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. 78 எம்.எல்.ஏ.க்களும் அதில் கலந்து கொண்டனர். அவர்களும் நிதிஷ்குமாரை முதல் மந்திரியாக்க ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிதிஷ்குமார் பெற்றார்.
இதைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரை ராஜேந்திர அர்லேகர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தற்போதைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து, பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் நேற்று ( ஜனவரி 28ந்தேதி 2024) பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.
பாட்னாவில் நடைபெற்ற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர், முதல்-மந்திரியாக நிதிஷ்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுதிரி, விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.
‘நிதிஷ்குமார் குறித்து கருத்து தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ் ஒரு துரோகி, பச்சோந்தி’ கடுமையாக விமர்சனம் செய்தார். , ”நிதிஷ்குமார் இவ்வாறுதான் செல்வார் என்பத எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால் இண்டி கூட்டணியின் நன்மைக்காக நாங்கள் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் ஏதாவது சொல்லியிருப்பின், அதனை பயன்படுத்திக்கொண்டு தவறான செய்தி பரப்புவார்கள். லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ்ஆகியோர் இந்த தகவலை ஏற்கனவே எங்களுக்கு அளித்திருந்தனர்., அது தற்போது உண்மையாகிவிட்டது.
நாட்டில் ‘ஆயா ராம்-கயா ராம்’ என்று பலர் உள்ளனர். நிதிஷ் குமார் விரும்பியிருந்தால் இண்டி கூட்டணியில் நீடித்திருப்பார். அவர் விரும்ப வில்லை அதனால் வெளியேறி இருக்கிறார்” என்று தெரிவித்தார். (‘ஆயா ராம் கயா ராம்’ என்பது அடிக்கடி கட்சி மாறுவதைக் குறிக்கும் வகையில் 1990-களில் தொடங்கி இந்திய அரசியலில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகும்)
நிதிஷ்குமாரின் நடவடிக்கை குறித்து விமர்சனம் காங்கிரஸ் பொதுச்செயலரான ஜெய்ராம் ரமேஷ், நிதிஷ் குமாரை துரோகி, பச்சோந்தி என தனது எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், “அடிக்கடி அரசியல் பங்காளிகளை மாற்றும் நிதீஷ் குமார், நிறங்களை மாற்றுவதில் பச்சோந்திகளுக்கு கடும் போட்டியைக் கொடுக்கிறார். துரோகத்தில் நிபுணத்துவம் வாய்ந்த நிதிஷ் குமாரையும், அவர்களை அவ்வாறு ஆட்டுவிப்பவர்களையும் பீகார் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
பாரத் ஜோடோ நீதி யாத்திரையைக் கண்டு பிரதமரும் பாஜகவும் பயப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதிலிருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த அரசியல் நாடகம் நடத்தப்படுகிறது” என்று காட்டம் காட்டியுள்ளார்.
நிதிஷ் குமாரின் அரசியல் பயணம் / ஒரு பார்வை:
பாட்னாவை ஒட்டியுள்ள பக்தியார்பூரில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பத்தில் 1951 மார்ச் 1 அன்று நிதிஷ் குமார் பிறந்தார். பிகார் பொறியியல் கல்லூரியில் மின்னணு பொறியியல் பட்டம் பெற்ற நிதிஷ் குமார், அரசியலில் எப்போதும் நாட்டம் கொண்டவர்.
லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் ஆதரவில் நிதிஷ் குமார் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாலும், தனது சொந்த இடத்தை உருவாக்க, அவர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அரசியலில் இருந்த நிதிஷ் குமார், தனது வசதிக்கு ஏற்ப கட்சிகளையும் கூட்டணிகளையும் மாற்றிக்கொண்டே இருந்தார்.
கடந்த 1974 மற்றும் 1977க்கு இடையில் ஜெய் பிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் நிதிஷ் பங்கேற்றார். சத்யேந்திர நாராயண் சின்ஹா தலைமையிலான ஜனதா கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
நிதிஷ் 1985ஆம் ஆண்டு ஹர்நாட் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில், பிகாரில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த லாலு பிரசாத் யாதவின் கூட்டாளியாக இருந்தார்.
எமர்ஜென்சிக்கு எதிராக நின்ற ஜனதா தளத்தில் பல பாதிப்புகள் ஏற்பட்டன. 1994இல் ஜோர்டான் பெர்னாண்டஸ் சமதா கட்சியை உருவாக்கினார். நிதிஷ் அவருடன் இணைந்தார்.
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை தொடங்கி ரயில்வே வரை பல முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருந்தார்.
2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார். பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். ஆனால் அதன்பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், கட்சியில் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் முதலமைச்சரானார்.
2015ஆம் ஆண்டு, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பரம எதிரியாக கருதப்படும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் லாலுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மீண்டும் முதலமைச்சரானார்.
பின்னர், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி மெகா கூட்டணியில் இருந்து வெளியேறினார். பின்னர், மீண்டும், பாஜகவுடன் கைகோர்த்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். ஆனால் சில காலங்களில், தன்னுடைய கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறி, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து மீண்டும் விலகி லாலுவுடன் கைகோர்த்தார்.
இப்படி, மாறி மாறி கூட்டணி வைத்த நிதிஷ், பாஜகவுக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I கூட்டணியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். ஆனால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவி வந்தது. மேலும், அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. , அதற்கு காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு I.N.D.I. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்கப்பட்டது. ஆனால், ஏற்க மறுத்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
இந்த வாய்ப்பை சரியான பயன்படுத்திக்கொண்ட பாஜக தலைமை, மறைந்த பிகார் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை பாராட்டிய நிதிஷ்குமார் பாஜகவுடன் கைக்கோர்க்க முடிவு செய்தார். இதையடுத்து தனது அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் மாற்றினார். மேலும் ஆர்ஜேடி உடனான கூட்டணியில் அதிருப்தியுடன் இருந்து வந்த நிதிஷ்குமார் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜக அரசை பாராட்டினார். மேலும் பாஜகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
நிதிஷ்குமாரின் இந்த திடீர் நடவடிக்கை, மாநிலத்திலும், இண்டி கூட்டணியிலும் பேசும் பொருளாக மாறியது. அதை உறுதி செய்யும் வகையில், தனது முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அதே நாளில் மீண்டும் பாஜக ஆதரவுடன் மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன், ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும், பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா, பிரேம் குமார் ஆகியோரும் மாநில அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
பாஜகவை ஒழிக்கவே 28 எதிர்க்கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணியை உருவாக்க முனைப்பாக செயலாற்றி வந்த நிதிஷ், தனது அரசியல் வேஷத்தை கலைத்து, தான் ஒரு பச்சோந்தி என்தை மீண்டும் நிரூபிக்கும் வகையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக தொடர்ந்து வருகிறார்.
நிதிஷ்குமார், கடந்த 10 ஆண்டுகளாக, ஐந்து முறை கூட்டணி மாறி ஆட்சி அமைத்துள்ளதுடன் 9வது முறையாக மாநில முதலமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…