பாட்னா :
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வென்றுள்ள போதிலும், முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பின்னடைவை சந்தித்துள்ளது.
பா.ஜ.க. 74 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 இடங்களில் மட்டுமே ஜெயித்துள்ளது.
இதனால் நிதீஷ்குமார் மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்க தயங்குவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பிறகு பாட்னாவில் நிதீஷ்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “பீகார் மாநிலத்தில் மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க நான் உரிமை கோரவில்லை” என்று அதிரடியாக அறிவித்தார்.
“முதல்-அமைச்சர் யார் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி தான் முடிவு செய்யும்” என்று குறிப்பிட்ட நிதீஷ்குமார் “தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் கூட்டம் வெள்ளிக்கிழமை ( இன்று) நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.
கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நிதீஷ்குமார், “சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சி, கூட்டணியில் உள்ளதா ? என்பது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
– பா. பாரதி