புதுடெல்லி: கொரோனாவால் முடங்கியிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த, ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படுவதாக கூறுகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது, “மார்ச் மாதத்தில் இருந்து முடங்கிக் கிடக்கும் சுமார் 6 லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்களை சீர்படுத்த வேண்டும். சுமார் 25 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை சீரமைக்க நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த நிறுவனங்களுக்கு நிலுவை தொகையை 40 நாட்களுக்குப் பிறகு செலுத்துவதற்கு வழிகளை செய்துள்ளோம். பெரும்பாலான தடைகளும் அகற்றப்பட்டுள்ளன.
சந்தையில் பணப்புழக்கம் இல்லை. பொருளாதாரத்தின் சக்கரம் மீண்டும் செயல்படுவதற்கு நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது.
மத்திய அரசில் இருந்து ரூ.20 லட்சம் கோடி, மாநில அரசுகளின் மூலமாக ரூ.20 லட்சம் கோடி, பொது மற்றும் தனியார் முதலீடுகளில் இருந்து ரூ.10 லட்சம் கோடி தேவைப்படுகிறது” என்றுள்ளார் அமைச்சர்.