நாக்பூர்

முன்பு ஒரு முறை ரிசர்வ் வங்கி ஆளுநரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என நிதி அமைச்சரிடம் கூறியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் நடந்த பாஜகவின் முதல் கட்ட ஆட்சியில்  அருண் ஜெட்லி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் நிதி அமைச்சர்களாகப் பதவி வகித்து வந்தனர். அப்போது ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் ஆகியோர் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தனர். ரகுராம் ராஜன் பதவிக் காலம் முடிந்த பிறகு அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. உர்ஜித் படேல் பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்தார்.

தற்போதைய பாஜக  அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள நிதின் கட்கரி சமீபத்தில் நாக்பூரில் இரு நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார் அப்போது அவர் உரையில் நிதி அமைச்சரிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் நடவடிக்கை சரி இல்லாததால் அவரை பணி நீக்கம் செய்யுமாறு நிதி அமைச்சரிடம் கூறியதாகத் தெரிவித்தது கடும் பரப்ரபபி உண்டாக்கி உள்ளது.

நிதின் கட்கரி, “நான் நாட்டின் முன்னேற்றத்துக்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் சற்றே நெகிழ்வான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்க  முயன்றேன். ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார். அப்போது நிதி அமைச்சர் என்னிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா செய்வதாக மிரட்டி வருகிறாரே தவிர அவ்வாறு செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

நான் நிதி அமைச்சரிடம் அவர் தானாக ராஜினாமா செய்யாவிடில் நீங்கள் பதவி நீக்கம் ச் செய்யுங்கள் எனவும் அவர் நடவடிக்கை சரியாக இல்லை எனவும் தெரிவித்தேன்.  தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இருப்பதைப் போல் நேர்மறையான நடவடிக்கை கொண்டவர் மட்டுமே  இந்த பதவிக்குத் தகுதியானவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர் இதில் சம்பந்தப்பட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் நிதி  அமைச்சர் பெயரைத் தெரிவிக்கவில்லை