அகமதாபாத்:
இரு சிறுமிகளை கடத்திச்சென்றதாக பெற்றோர்கள் கூறிய புகாரைத் தொடர்ந்து, குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நித்யானந்தாவையும் கைது செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக நித்யானந்தா வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சர்ச்சைக்கு பெயர்போன சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஏற்கனவே அவரது சீடர் ஆர்த்தி ராவ் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுத்த புகாரில் நித்தியானந்தா ஜாமின் பெற்றுள்ள நிலையில், மதுரை ஆதினம் வழக்கும் நிலுவையில் உள்ளது. இதுபோல பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வருகிறார். இந்த நிலையில்தான், தற்போது, குழந்தைகளை நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டதாக புகாரில் அவரை கைது செய்ய காவல்துறை தேடி வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவர் தனது 19 வயது, 15 வயது மகள்கள், 13 வயது மகன் ஆகியோரை நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். குறிப்பிட்ட நாள்களுக்குப் பின் அவர்களை பார்க்கச் சென்ற போது அவரது பிள்ளைகள் அவருடன் வர மறுத்துள்ளனர். மேலும் ஆசிரமத்தைச் சேர்ந்தோர் அவரை அடித்து விரட்டியதாகவும், தற்போது அந்த குழந்தைகள் குஜராத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதும், அந்த இளம்பெண்கள் தரப்பில் இருந்து, நாங்கள் கடத்தப்படவில்லை, விரும்பியே இங்கு வந்துள்ளேன்” என்று பேசும் வீடியோவை நித்தியானந்தா தரப்பினர் வெளியிட்டனர்.
இந்த நிலையில், தங்களது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு, ஜனார்த்தன ஷர்மா குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பினர், ஷர்மாவின் 15 வயது மகள் மற்றும் 13 வயது மகனை மீட்டனர். அவர்களை கடத்தியதாக நித்யானந்தா மற்றும் அவரது சிஷ்யைகள் பிரியா தத்வா, ப்ரான் பிரியா ஆகிய மூவர் மீது அகமதாபாத் விவேகானந்த நகர் காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நித்யானந்தா சிஷ்யைகள் பிரியா தத்வா, ப்ரான் பிரியா ஆகிய இருவரையும் காவல்துறை யனிர் கைது செய்துள்ள நிலையில், நித்யானந்தாவையும் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து கூறிய அகமதாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி.ஆச்சாரி நித்யானந்தா மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் காரணமாக நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நித்தியானந்தா மீது பல்வேறு புகார் எழுந்துள்ள நிலையில், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் அவர் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.