டில்லி
ஜப்பானின் வாகன உற்பத்தி நிறுவனமான “நிசான்” இந்தியா மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கடந்த 2008ஆம் வருடம் ஜப்பானின் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனம் நிசான். இந்த நிறுவனம் தனது சர்வதேச பார்ட்னரான ரெனவுல்ட் உடன் சேர்ந்து சென்னையில் ஒரு வாகன உற்பத்தி தொழிற்சாலை தொடங்க உத்தேசித்தது. அப்போது தமிழ்நாடு மாநில அரசு இந்த நிறுவனத்துக்கு வரித்தொகை திருப்பி அளிப்பது உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்தது.
இரு நிறுவனங்களும் இணைந்து வருடத்துக்கு 4,80,000 வாகனங்கள் அமைக்கும் திறனுடைய ஒரு தொழிற்சாலையை ஏழு ஆண்டுகளில் ரூ.6100 கோடி செலவில் அமைத்துள்ளது. வரும் 2015ஆம் வருடம் நிறுவனம் தனக்கு வர வேண்டிய சலுகைத் தொகைக்காக தமிழக அரசை அணுகிய போது தமிழக அரசு அதை தரவில்லை. அதைத் தொடர்ந்து அரசுக்கு சட்டப்படி தங்களுக்கு வர வேண்டிய தொகை வராததால் தாங்கள் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் உடனடியாக அதை தர வேண்டும் எனவும் நிசான் நிறுவனம் நோட்டிஸ் அனுப்பியது.
நோட்டிஸ் அனுப்பியும் சலுகைத் தொகையை மாநில அரசு தராததால் இந்தியப் பிரதமர் என்னும் முறையில் இது குறித்து மோடிக்கும் ஒரு நோட்டிஸ் அனுப்பியது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் அனுப்பப்பட்ட இந்த நோட்டிசுக்கும், அதன் பிறகு அனுப்பப்பட்ட பல நினைவூட்டல் கடிதங்களுக்கும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. பல முறை மத்திய அரசு அதிகாரிகளுடனும், மாநில அரசு அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக நிசான் நிறுவனம் வழக்கு பதிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நிசான் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தங்களுக்கு $770 மில்லியன் டாலர் வர வேண்டும் எனவும் அதை அரசிடம் இருந்து வாங்க முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மூத்த தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு போகாமல் தர வேண்டிய தொகையை தர அரசு முயற்சி செய்து வருவதாக கூறி உள்ளார்.
இது குறித்து பிரதமரின் மோடியின் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.