சென்னை:
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் மதுரை பல்கலைக்கழகம், சென்னை கவர்னர் மாளிகை உள்பட பலரின் பெயர்கள் அடிபடுவதால், இதுகுறித்து விசாரிக்க கவர்னர் தன்னிச்சையாக விசாரணை கமிஷன் அமைத்துள்ளார். அதுபோல மாநில அரசு சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், நிர்மலாதேவி வழக்கை சரியான பாதையில் விசாரிக்க வேண்டுமென்றால், பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுதான் விசாரிக்க முடியும் என்றும், எனவே பெண் டிஐஜி தலைமையில் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரி புரட்சிகர மாணவர்கள் முன்னணி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.