சென்னை:

ருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக கவர்னர் அமைத்த விசாரணை கமிஷன் அதிகாரி சந்தானம், தனது விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று மாலை அறிக்கையை கவர்னர் பன்வாரிலாலிடம் சமர்ப்பித்தார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர்  கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி, அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி தற்போது மதுரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கவர்னர் மாளிகை சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து, கவர்னர் தனியாக ஓய்வுபெற்ற அதிகாரி சந்தானத்தை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து, அறிக்கை தாக்கல் செய்ய பணித்தார். தமிழக அரசு சார்பில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சந்தானம் தலைமையிலான குழுவினர் பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டனர். தேவாங்கர் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாதிக்கப்பட்ட மாணவிகள், நிர்மலாதேவி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களிடமும் பலகட்ட விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து கடந்த வாரம்  தனது விசாரணை முடித்துக்கொண்டதாக அறிவித்த சந்தானம், விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று மாலை கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இது தொடர்பான வழக்கில்,  கடந்த 11ந்தேதி சென்னை உயர்நீதி மன்றம்  நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் அமைத்த விசாரணை குழுவான,  சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும், அதனை வெளியிடக்கூடாது என  பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.