சென்னை:
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் மற்றும் காவிரி தொடர்பான வழக்கு வரும் 3ந்தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், மத்திய அரசு அதை செயல்படுத்தாமல், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு கால தாமதம் செய்தது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசுமீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம், மே3ந்தேதிக்குள் காவிரி பிரச்சினை குறித்து வரைவு அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்காததை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு விடுத்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்திலும், ஆளுநர் அமைத்துள்ள விசாரணை கமிஷன் மற்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பரபரப்பான தகவல்களும், விசாரணை வளையமும் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாநில ஆளுநர் ‘பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசுகிறார். அப்போது காவிரி பிரச்சினை, நிர்மலாதேவி பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.