டில்லி
புல்வாமா தாக்குதல் குறித்த ஆதாரங்களை அளிக்குமாறு பாகிஸ்தான் கேட்டதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. அதை ஒட்டி அந்த இயக்கத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் பாகிஸ்தானை கேட்டுக் கொண்டன.
நேற்று இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. இது குறித்து ஆதாரம் அளித்தால் பாகிஸ்தான் தக்க நடவடிக்கை எடுக்கும். அதே நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு இந்தியாவை மட்டுமின்றி பல உலக நாடுகளையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்துக்கு முன்னர் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்ட பிரான்ஸ் தற்போது இந்த இயக்கத் தலைவர் மசூத் அசாரை பயங்கர வாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாவை வலியுறுத்த உள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்களிடம், “காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலால் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். அதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு எங்கே எப்போது மற்றும் எப்படி பதிலடி கொடுப்பது என்பதை ராணுவம் முடிவு செய்யும்.
இந்த தாக்குதலுக்கு ஆதாரம் அளிக்குமாறு பாகிஸ்தான் கேட்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. மும்பை தாக்குதல் குறித்த ஆதாரங்களை நாம் பலமுறை பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளோம். ஆனால் அந்நாடு அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியும் பாகிஸ்தானுக்கு எவ்வித ஆதாரமும் கொடுக்க இந்தியா தயாராக இல்லை” என கூறினார்.