டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி மருத்துவம மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரிழந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வாங்கிக்கொடுத்த பிரபல உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா, ஹத்ராஸ் வழக்கையும் கையிலெடுத்துள்ளார்.
உ.பி.மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த இளம்பெண்ணை பெற்றோர்கள் அனுமதியின்றி காவல்துறையினரே தகனம் செய்ததும் விவாதப்பொருளாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டும், சுட்டுக்கொல்ல வேண்டும் என அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்த நிலையில், 2012 கும்பல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட நிர்பயாவின் நீதிக்காக போராடிய வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா, இப்போது 19 வயது ஹத்ராஸ் கற்பழிப்பு விஷயத்தில் ஆர்வம் காட்டி உள்ளதாகவும், அவர் ஹத்ராஸ் வழக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஹத்ராஸ் பகுதியில் கடந்த இரு நாட்களாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், வெளியில் இருந்து யாரும் அங்கு வர அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்தவியாழக்கிழமை சீமா குஷ்வாஹா பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்க முயன்றார், ஆனால் அவர்களை உத்தரபிரதேச போலீசார் தடுத்து நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய வழக்கறிஞர் சீமா, “இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரிழந்தது தொடர்பாக, அவரது குடும்பத்தினர் என்னை ஹத்ராஸுக்கு அழைத்துள்ளனர், ஏனெனில் நான் அவர்களின் சட்ட ஆலோசகராக நிற்க வேண்டும் என விரும்புகின்றனர். இதையடுத்து அங்கு செல்ல நான் முயற்சி செய்தேன். ஆனால், மாநில அரசு, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பாதிக்கும் என்று கூறி, அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை” என்றார்.
மேலும், ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவரின் சகோதரருடன் தான் தொடர்பு கொண்டு வருவதாகவும் விரைவில் இது தொடர்பாக நல்ல முடிவு எடுப்பேன் என்றும் தெரிவித்து உள்ளார்.
ஹத்ராஸ் சம்பவத்தை, சீமா குஷ்வாஹா கையில் எடுத்து, வழக்கு தொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.