டெல்லி:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான  அக்‌ஷய் உச்சநீதி மன்றத்தில்  இன்று மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, 23-வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே குற்றவாளிகளால் தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 2012ம் ஆண்டு  டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த கொடூர குற்றம் தொடர்பாக,  ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி (16வயது குறைவானவர்) உள்பட  6 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங்  2013-ம் ஆண்டு மார்ச் 11ந்தேதி  திகார் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும், மற்ற 3 குற்றவாளிகளான  முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீடு மனுக்களை டெல்லி உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தன. இதையடுத்து, குற்றவாளிகளுக்க விரைவில் தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், தற்போது அக்ஷய் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே  வினய், முகேஷ் மற்றும் பவன் ஆகிய 3 குற்றவாளிகள் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.