டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுவேன் என்று அவரது வழக்கறிஞர் ஏபி சிங் சவால் விடுத்திருப்பதாக நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை தெரிவித்துள்ளார்.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணையின் டெல்லி நீதிமன்றம் வந்திருந்தார் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி. தூக்கிலிட தடை என்ற உத்தரவை கேட்ட அவர் அங்கேயே கதறி அழுதார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லோரும் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், டெல்லி அரசு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மத்திய அரசு கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன், நீதிமன்றங்களும் அரசாங்கமும் இந்த குற்றவாளிகள் முன் தலை குனிந்து கொண்டு இருக்கின்றன. நாங்கள் ஏமாற்றமடைகிறோம்.
நான் காலை 10 மணி முதல் இங்கே (நீதிமன்றத்தில்) அமர்ந்திருக்கிறேன். நீதிமன்றம் இந்த குற்றவாளிகளை மீண்டும் காப்பாற்ற விரும்பினால், ஏன் இவ்வளவு நேரம் எடுக்க வேண்டும்?
எங்களை ஏன் உட்கார்ந்து இவ்வளவு நேரம் நம்ப வைக்க வேண்டும்? நாங்கள் இந்த நேரமெல்லாம் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். குற்றவாளிகளின் வக்கீல், ஏ.பி.சிங், குற்றவாளிகள் ஒருபோதும் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று கூறி எனக்கு சவால் விடுத்துள்ளார். நான் தொடர்ந்து போராடுவேன். குற்றவாளிகளை அரசாங்கம் தூக்கிலிட வேண்டும்.