டெல்லி:
நிர்பயா பாலியல் வழக்கு கொலை குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதி மன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் மருத்துவமாணவி நிர்பயா ஓடும் பேருந்தில், ஒரு கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, சாலையில் தூக்கி விசப்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்தியாவுக்கு தலைகுனிவை உருவாக்கியது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் வழக்கறிஞர்களின் சமயோசிதத்தாலும், சட்டத்தின் ஓட்டைகளாலும் அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது தள்ளிப்போய்க்கொண்டே செல்கிறது. ஏற்கனவே 3 முறை அவர்களை தூக்கிலேற்ற தேதி குறிக்கப்பட்ட நிலையில், 4வது முறையாக வரும் 20ந்தேதி தூக்கிலேற்ற கடந்த 4ந்தேதி டெல்லி நீதிமன்றம் நாள் குறித்தது.
இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தண்டனையை தாமதப்படுத்தும் விதமாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு கொடுக்க தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மனுவை உச்சநீதி மன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமா அல்லது தள்ளுபடி செய்யுமா என்பதை பொறுத்தே அவர்களின் தூக்கு உறுதியாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
\