டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப். 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால், நால்வரில் ஒருவரான முகேஷ் சிங், குடியரசு தலைவருக்கு கருணை மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.
அந்த மனுவை நிராகரிக்குமாறு டெல்லி மாநில அரசு, துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரைத்து இருந்தது. துணை நிலை ஆளுநரும், மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தார்.
உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்குப் பிறகு கருணை மனு, நேற்றிரவு குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அவரும் முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார். இந்த விவரம் கருணை மனு போட்ட முகேஷ் சிங்கிற்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. அதன்படி, வரும் 22ம் தேதி நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனை, பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்கள் நோட்டீசுக்கு பிறகு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பது விதியாகும். ஆகையால், புதிய தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறை எண் நான்கிற்கு மாற்றப்பட்டுள்ளனர். தூக்கு மேடை அங்கு இருப்பதே காரணம். 4 பேரையும் தனித்தனி அறைகளில் அடைத்து கண்காணித்து வருகின்றனர்.