புதுடில்லி: நிர்பயா வழக்கில் தற்போது வந்துள்ள தீர்ப்பு குறித்து அவரது தாயார் ஆஷா தேவி தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். தில்லி நீதிமன்றம் நிர்பயாவை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில் நான்கு பேர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கிய ஒன்றாகும். சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் குரூர செயல் எல்லோரையும் பெரிய பாதிப்புக்குள்ளாக்கியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் எழுந்தன.
ஏழு வருடங்களாக தொடர்ந்த வழக்கு விசாரணை தற்போது டில்லி நீதிமன்றத்தால் மரணதண்டனையை உறுதி செய்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுகிறார்கள். இது குறித்து நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆஷா தேவி, இறுதியாக எனது மகளுக்கு நியாயம் கிடைத்துள்ளது. இந்த நாட்டில் உள்ள பெண்களுக்கு, இந்த நான்கு பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் மகிழ்ச்சி பிறக்கும். நீதித்துறை மீதான நம்பிக்கையை, மக்களிடம் இந்த தீர்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
நிர்பயாவின் தந்தை பத்ரிநாத்சிங் கூறுகையில், இது போன்ற தீர்ப்புகள் பலாத்கார குற்றவாளிகளுக்கு மனதில் பயத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க உதவும் என்று தெரிவித்தார்.