சென்னை:
சென்னையில் இன்று மேலும் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மொத்த பாதிப்பு 40,698 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி, 28924 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல நேற்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கையும் 290 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் தற்போது 360 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று மேலும் 9 பேர் சென்னையில் கொரோனாவால் பலியாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
அதன்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரும், சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி,  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர்  மற்றும்  ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 77 வயது முதியவர் உள்பட 9 பேர் இன்று பலியாகி உள்ளனர். இதனால் சென்னையில் பலி எண்ணிக்கை 299ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று 12 பேர் பலியான நிலையில், இன்று 9 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.