1966 ல் காலநிலை விசித்திரமாக இருந்தது. அந்த வருட நவம்பரில் சென்னையை இரு புயல்கள் தாக்கின. நவம்பர் மாத தொடக்கத்தில் ஒரு தாழ்ந்த காற்றழுத்த மண்டலம் தெற்கே அந்தமான் கடல் பகுதியில் உருவாகி மேற்கு நோக்கி நகர்ந்தது. அது சென்னைக்கு அருகில் கடலை கடந்ததால் சென்னையை மிகவும் பாதித்தது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். இந்த பலத்த காற்று ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயிலைத் தண்டவாளத்திலிருந்து தள்ளிவிட்டுத் தடம்புரளச் செய்தது. தொலைப்பேசி, ரேடியோ மற்றும் நகரின் மின் விநியோகம் தடைப் பட்டது.

சென்னை துறைமுகத்துக்கு மேரி ஹோரா என்னும் சரக்கு கப்பல் கோதுமை ஏற்றி வந்தது. அதனுடன், மூன்று துணை கப்பல்களும் வந்தன. அதில் ப்ரோகிரஸ் மற்றும் ஸ்டமாட்டிஸ் என்ற துணை கப்பல்களும் இருந்தன. சரக்கு கப்பல்கள் அமெரிக்காவிலிருந்து முக்கிய துறைமுகங்களுக்குக் கோதுமை எடுத்துச் செல்லும். அங்கிருந்து, கோதுமையை மற்ற இடங்களுக்கு துணைக்கப்பல்கள் எடுத்துச் சென்றன.


இரு கப்பல்கள் (தாய் கப்பலும் ஒரு துணை கப்பலும்) அருகருகே மிதந்து கொண்டிருக்க, வாக்யும் பம்ப் மூலம் தானியங்களை தாய்க்கப்பலிருந்து உறிஞ்சி துணை கப்பலில் ஏற்றப்படுவது வழக்கமாகும். இதில் ஸ்டமாட்டிஸ் என்னும் ”லிபர்டி” வகை கப்பல் லைபீரியன் கொடியுடன் முதலில் வந்தது. ஆனால் எஸ் எஸ் ப்ரோகிரஸ் கப்பலிலிருந்து தாய் கப்பலை அருகில் எடுத்து வருமாறு துறைமுக கேப்டனுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது.

”லிபர்டி” வகை கப்பல்
”லிபர்டி” வகை கப்பல்

அப்போது காற்றின் வேகம் கடுமையாக இருந்தது. கடலில் ‘வெள்ளைக் குதிரைகள்’ எனும் அலைகள் மிக வேகமாகவும் உயர்ந்தும் எழத் தொடங்கின. தவறான வானிலை அறிக்கையினால் துறைமுக அதிகாரிகள் கப்பல்களைத் துறைமுகத்துக்குத் தூரமாக நிறுத்தவில்லை. வழக்கமாகப் புயல் அடிக்கும் போது துறைமுகத்தினுள் கப்பல்கள் நிறுத்தப்பட மாட்டாது. கப்பல்கள் மேலும் கீழுமாக ஆடியதில் அதிலுள்ள ஒயர்களும் கயிறுகளும் ஒன்றுக்கொன்று நூற்கண்டுகள் போல் பின்னிப் பிணைந்து அறுந்தன.

அமெரிக்கக் கப்பல் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தது. ஆயினும் கடுமையான சூறாவளியில் அதனுடைய சுக்கான் காற்றில் பறந்தது. மற்றும் அதன் அடிப்பாகம் நீருக்கு மேல் வருவதை மக்களால் காண முடிந்தது. பலத்த காற்றும் கடல் அலைகளையும் சமாளிக்க முடியாத எஸ் எஸ் ப்ரோகிரஸ் நீரில் மோதி இரண்டாக உடைந்து அதிலிருந்த 25 சீனக் குழுவும் கொல்லப்பட்டனர்.

மற்றொருபுறம், ஸ்டமாடிஸ் புயலால் கடுமையாகச் சீரழிக்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டது. அந்த கப்பல் கூவம் ஆற்றின் முக துவாரத்துக்கு  அடித்துச் செல்லப்பட்டு மெரினா கடற்கரையில் ஒதுங்கியது. புயல் சிறிதளவு குறைந்தவுடன் அந்த தரை தட்டிய கப்பலைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர்.

சுமார் 10 நாட்களுக்குப் பிறகு அந்த கப்பலை மணலிலிருந்து வெளியே எடுக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் ஸ்டமாடிஸ் கப்பலை மீட்க முடியவில்லை. இந்த கப்பலின் உரிமையாளர்களான டயான மாரிடைம் கார்போரேஷன் இந்த கப்பலை வெறும் ரூ.3.3 லட்சத்துக்கு ஸ்கிராப் ஆக விற்பனை செய்தது. ஆனால் அந்த உடைந்த கப்பலை முழுமையாக எடுக்க முடியவில்லை. பல வருடங்களாக ஸ்டமாடிஸ் கப்பல் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வந்தது. பலர் கட்டுமரக்காரர்களுக்கு ஒரு ரூபாய் கட்டணம் அளித்து அதன் உள்ளே சென்று பார்த்தனர்.

ஆனால் அந்த தரை தட்டிய கப்பல் மெல்ல மெல்ல மரண வலையாக மாறியது. அதன் உள்ளே நீச்சலிட்டு சென்றவர்கள் பலரும் அங்கிருந்த துருப்பிடித்த இரும்புகளால் கிழிக்கப்பட்டு மரணமடைந்தனர். 1983 ல் பொங்கல் சமயத்தில் இந்த கப்பலால் மரணமடைந்த 19 பேரின்  சடலம் கரை ஒதுங்கியது.

முடிவாக 1990 ல், அந்த உடைந்த கப்பலின் பாகங்கள் இரு கிரேன்கள் கொண்டு சிறிது சிறிதாக அகற்றப்பட்டன.

-வெங்கடேஷ்