முப்பது வருடங்களாக முகமது அலி ஜின்னா சென்னை வராமல் இருந்தார். ஒரு வித கோபமாக இருக்கலாம்.
ஜின்னாவின் மணவாழ்க்கை, தன் இளம் மனைவி சென்னை தியோசாபிகல் சொசைடியில் சேர்ந்ததுடன் தனது
மகளையும் சொசைட்டியின் பள்ளியில் சேர்க்க நினைத்தபோதே, முறிந்து போனது.
1941 ல் இஸ்லாமியத் தேசியம் வட இந்தியாவில் வளர்ந்த போதும் தெற்கே வளர்ச்சி அடையவில்லை. அப்போது சென்னை பீப்பிள்ஸ் பூங்காவில்
நடந்த முஸ்லிம் லீகின் 28வது மாநாட்டுக்கு ஜின்னா தலைமை தாங்க ஒப்புக் கொண்டார், அதற்காக அந்த பூங்காவின் ஒரு பகுதி ஜின்னாபாத் எனப் பெயரிடப்பட்டிருந்தது.
பாம்பே மெயிலில் வந்த ஜின்னா உடல்நிலை சரியில்லாததால் மாநாட்டு அமைப்பாளர்கள் நடத்த இருந்த வரவேற்பில் கலந்துகொள்ள விரும்பவில்லை. அவர் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்த மேம்பாலத்தில் ஏறி, ஹாரிங்டன் சாலையிலிருந்த பெவர்லி ஹில் இல்லத்துக்குச் சென்றார்.
திட்டம் மாறியது தெரியாமல் செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவல்லிக்கேணி பெரிய மசூதி வரை ஏராளமான கூட்டம் கூடியிருந்தது.
செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் நுழைந்ததும் ”ஜின்னா ஜிந்தாபாத். முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்” என்னும் வரவேற்பு முழக்கம் காதை பிளந்தது.
ஜின்னாவுக்கு பதிலாக மகுதாபாத் மன்னர், அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலத்தில் வந்தார். அவரை ஜின்னா எனத் தவறாகப் புரிந்து கொண்ட
கூட்டத்தினர் அவரை வாழ்த்தி தொண்டை நீர் வற்றும் அளவுக்குக் கோஷமிட்டனர். மன்னரும் தனக்குக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கூட்டத்தை நோக்கி கை அசைத்தபடி வந்தார்.
ஜின்னாபாத் மாநாட்டுக்கு வந்திருந்த 1200 பிரதிநிதிகளும் ஜின்னா கொடி ஏற்ற வருவார் என நினைத்து மீண்டும் ஏமாற்றம் அடைந்தனர். ஜின்னா உடல்நிலை சரி ஆகாததால் மன்னர் கொடி ஏற்ற அழைக்கப்பட்டார்.
ஏப்ரல் 14 ஆம் தேதி பாதுகாப்புடன் மாநாட்டுப் பந்தலில் ஜின்னா நுழைந்து அமைப்பாளர்களுக்கு நிம்மதி அளித்தார். கூட்டத்தினரைப் பார்த்து சலாம் செலுத்திய ஜின்னாவை மக்கள் ஜின்னா ஜிந்தாபாத் எனக் குரல் எழுப்பி வரவேற்றனர். சற்றே பலவீனம் அடைந்திருந்த ஜின்னா கூட்டத்தைப் பார்த்து
புத்துணர்வு பெற்றார். இந்த கூட்டத்தில் நடந்த ஒரு ஆச்சரியகரமான விஷயம் இஸ்லாமியர் அல்லாதோரும் கலந்து கொண்டதாகும். ஜின்னாவின் 2 மணி நேர உரையை ஈ வே. ராமசாமி, கொச்சின் திவான் ஆர் கே சண்முகம் செட்டி, குமாரராஜா முத்தையா செட்டியார் மற்றும் சுதேசமித்திரன் ஆசிரியர் சி ஆர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆர்வமுடன் கேட்டனர். கூட்டத்தில் பேசிய ஜின்னா முதலில் உருதுவில் பேச ஆரம்பித்தாலும் பிறகு தனக்கு எளிதான மொழியான ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
தனது தலைமை உரையில் ஜின்னா நாட்டை மூன்றாகப் பிரிக்கவேண்டும் எனக் கூறி ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார். பாகிஸ்தானைப் போல் திராவிடஸ்தான் என்னும் மூன்றாம் நாட்டையும் அவர் கேட்டார். மற்றும் இதற்குப் பிராமணரல்லாதோருக்கு இஸ்லாமியர்கள் உதவி புரிவார்கள்
என உறுதியும் அளித்தார். ஜின்னா திராவிடஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை மகிழவைத்தது.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஜின்னா ஏப்ரல் 20 ஆம் தேதி நடத்த இருந்த பெங்களூர் பயணத்தை ரத்து செய்தார். அதன் பிறகு இரு தினங்களுக்குப் பிறகு இங்கிருந்து கிளம்பினார். அதன் பிறகு அவர் திராவிடஸ்தன் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது திராவிட தலைவர்களுக்கு
மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. இப்போது நினைவு கூர்கையில் ஜின்னாவின் வருகையின் போதுதான் திராவிட நாடு அமைவது மிக நெருக்கத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-வெங்கடேஷ்