தமிழ்நாட்டில் 1920 களில் கடும் பஞ்சம் நிலவியது. அந்தச் சூழ்நிலையில்
ஒரு தமிழ் நகைச்சுவை பத்திரிகையை நடத்துவது சரியான செயலாக இருந்திறாது. எனினும், அதனை உணராமல் பூதூர் வைத்தியநாத ஐயர் ஆனந்த விகடன் என்னும் பத்திரிகையை ஆண்டு சந்தா ரூ. 2 க்கு நடத்த முயன்றார்.

அப்போது வால்யு பேய்ட் பார்சல் (VPP) என்னும் திட்டத்தின் மூலம் பணத்தை கொடுத்து தபால் பெறும் முறையில் பத்திரிகை பிரதிகள் அனுப்பப்பட்டன. ஆனால், முதலில் ஒரு ஆர்வத்துடன் ஆர்டர் கொடுத்தவர்கள் புத்தகம் வரும் நேரத்தில் மனதை மாற்றிக் கொண்டு திருப்பி அனுப்பிவிடுவார்கள் . கோபம் அடைந்த ஐயர் அடுத்து வரும் இதழ்களில் இவ்வாறு செய்பவர்களை நம்பிக்கை துரோகிகள் என இகழ்ந்து அவர்கள் பெயர்களை பத்திரிகையில் குறிப்பிட்டுப் பதியவும் ஆரம்பித்தார்.

பண தட்டுப்பாட்டினால் வைத்தியநாத ஐயரால் சில இதழ்களை வெளியிட முடியவில்லை. இதை, பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தவர்கள் வெகுவாக எதிர்த்தார்கள். அதில் ஒருவர் தான், எஸ் சீனிவாசன் (எஸ் எஸ் வாசன்) எனப்படும் இளைஞர். இதில் அதிசயம் என்னவென்றால் அவர் இதே வி பி பி வழக்கத்தைத் தனது வர்த்தகத்துக்கு மிகச் சாமர்த்தியமாக உபயோகப்படுத்தி வந்தார்.
எஸ் எஸ் வாசன் தனது கல்வியை நிறுத்திவிட்டு, அவருக்கு 20 வயது எட்டும் முன்பே ஒரு நல்ல விற்பனையாளராக உருவெடுத்து வந்தவர். அவர் ஐரோப்பா மற்றும் கிழக்காசிய நாடுகளிலிருந்து சோப்பு, சீப்பு, பொம்மை மற்றும் விளையாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்து, விற்பனை செய்தார். அவர் தாம் விற்கும் பொருட்களின் படங்களுடன் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து அதன் மூலம் விற்பனையைப் பெருக்கி வந்தார்.


குறைகூற வந்த வாசனிடம் வைத்தியநாத ஐயர், தனது பத்திரிகையின் நிலைமையை மன வேதனையுடன் தெரிவித்தார் ஐயர். இதைக் கேட்ட வாசன் பத்திரிகை முன்னேற்றத்துக்கு சில வழிகளைக் கூற, ஐயரோ, வாசனைப் பனியில் அமர்த்த முயன்றார். அதற்கு வாசன் ஒப்புக் கொள்ளாமல், தான் எந்த ஒரு முதலாளிக்குக் கீழும் பணி புரிய முடியாது எனப் பதிலளித்தார். கடைசிக் கட்டமாக, வாசனுக்குத் தனது பத்திரிகையை விற்க ஐயர் முன் வந்தார்.
பத்திரிகையின் விலையைக் கேட்ட வாசனுக்கு, ஐயர் விசித்திரமாக ஒரு கணக்கிட்டு விலையைச் சொன்னார். அதாவது ஆனந்த விகடன் என்னும் எழுத்துக்களைக் கணக்கிட்டு ஒரு எழுத்துக்கு ரூ.25 வீதம் விலையிட்டு ரூ. 200 என விலையை அறிவித்தார். அதன்படி பத்திரிகையின் முழு உரிமையும் ரூ. 200 க்கு விற்கப்பட்டது.


இதன் மூலம், வியாபாரியான வாசன் படைப்பாற்றல் உலகிற்குள் நுழைந்தார். ஆனந்த விகடனில் சாகித்திய அகாடமி பரிசு பெற்ற அசோக மித்திரன், கல்கி மற்றும் ஆர் கே நாராயணன் உள்ளிட்ட பலர் பணி புரிந்து வாசனின் படைப்பாற்றலுக்கு துணை நின்றனர். மாபெரும் திரி சித்திரங்களையும் படைத்தார் வாசன்.
இவை அனைத்தும், ஒரு விற்பனையாளரின் விளம்பரம் துரித நேரத்தில் மக்களைச் சென்றடையாததால்தான் நேர்ந்ததே!

-வெங்கடேஷ்