ஆண்டு 1948. தேதியோ ஜனவரி மாதம் 30. நாடெங்கும் துக்க செய்தி ஒன்று பரவலாயிற்று. மாலை ஐந்து மணிக்கு மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தி அது. அப்போது சென்னையில், பொதுமக்களில் சிலரிடம் மட்டுமே வீட்டில் வானொலி இருந்தது. கடற்கரை மற்றும் பூங்காக்களில் உள்ள வானொலிகளின் மூலம் பலர் இச்செய்தியைக் கேட்டறிந்தனர்.
அடுத்த நாள் காலைக்குள் சென்னை நகரம் முழுதும் பெரும் சோகத்தில் மூழ்கியது. தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. காந்தியின் இறுதிச் சடங்கை ஒட்டி 31 ஆம் தேதி ஊரெங்கும் முழு அடைப்பு நடைபெற்றது.


காந்தி இறந்ததையொட்டி, மாலை 4.15 முதல் 5.15 மணி வரை சுமார் 20000 பேர் கடலில் மூழ்கி துக்கம் அனுஷ்டித்தனர். பலரும் தலையை மொட்டை அடித்துக் கொண்டனர். முதல்வர் ஓமந்தூராரும் மெரினா கடற்கரையில் கடலில் மூழ்கி எழுந்தார்.
அப்போது ஆளுநர் ஜெனரல் மவுண்ட்பாட்டன் பிரபு மற்றும் அவர் மனைவி எட்வினா தற்செயலாக ஒரு வாரப் பயணமாக சென்னைக்கு வந்திருந்தனர். காந்தியுடன் நட்பு பாராட்டிய அவர்கள் இருவரும் தங்கள் உதவியாளர்களுடன் தனியார் விமானம் மூலம் டில்லிக்குத் திரும்பினார்கள்.


திருவையாற்றில் நடைபெற்ற தியாகராஜர் ஆராதனை விழாவும் சென்னை கந்தசாமி கோவில் பிரமோத்சவ விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது. அதே போல் திருமணங்களும் இதர நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்திய அரசு ஆர் எஸ் எஸ் இயக்கத்தைத் தடை செய்ததையொட்டி. மைலாப்பூர் சித்திரக்குளம் தெரு 4 ஆம் நம்பரில் இயங்கி வந்த இந்த இயக்கத்தின் அலுவலகம் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டது. அப்போது அங்கிருந்த மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் ஒருவர், ஒரு ஆசிரியர், ஒரு தையல் கலைஞர் மற்றும் அப்பாதுரை என்னும் கசாப்புக் கடைக்காரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மதராஸ் ஆளுநர், காந்தியின் அஸ்தியைக் கலசத்தில் எடுத்துவந்தார். அந்தக் கலசம் பொதுமக்கள் அஞ்சலிக்காக விருந்தினர் மாளிகையில் (தற்போதைய ராஜாஜி மண்டபத்தில்) வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக, அஸ்தி கரைக்கப்பட்ட தினமான பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

அன்றே அஸ்தி கலசம் விருந்தினர் மாளிகையிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை ஐஜி அலுவலகத்துக்கு எதிரில் உள்ள பகுதியில் முதல்வரால் கடலில் கரைக்கப்பட்டது. மீதமுள்ள அஸ்தி, 4 பாகமாகப் பிரித்து சிறப்பு ரெயில்கள் மூலம் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் விஜயவாடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

நகரத் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிலைக் குழு மதராசுக்கு காந்திப்பட்டினம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆயினும் அது நடைபெறவில்லை.

-வெங்கடேஷ்