இளையராஜாவின் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.
இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.
இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார்.
கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார்.
மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார்.
இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய சித்தம் படங்களில் நடித்த யுவஸ்ரீயும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் மனோபாலா முத்துராமன் மதுமிதா பட அதிபர் பி எல் தேனப்பன் டைரக்டர் ஜெயபிரகாஷ் ரஞ்சன் குமார் தமிழ்செல்வி உட்பட பலர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் நடித்திருக்கிறார்.
முதல் காதலை கொண்டாடிய அழகி ஆட்டோகிராப் பள்ளிக்கூடம் காதல் 96 போன்ற பட வரிசையில் பள்ளிக்கூட காதலின் ஆழத்தையும் தியாகத்தையும் அழகியலோடு சொல்ல வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.
பியார் பிரேமா காதல், கழுகு 2, காமன் மேன், இடியட் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி இப்படத்திற்கு ஒளி ஓவியம் தீட்டுகிறார். படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்க, கலையை முனி கிருஷ்ணா கையாளுகிறார் ஸ்டண்ட் காட்சிகளை பிரதிப் தினேஷ் அமைக்கிறார். நடனக் காட்சிகளை பிருந்தா, தினேஷ், தீனா மாஸ்டர்கள் வடிவமைக்கின்றனர். இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படம் பற்றி இயக்குனர் ஆதிராஜன் குறிப்பிடும்போது, “இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்திய , இளைஞர்களின் இதயம் கவர்ந்த இசையமைப்பாளர், ‘யங் மேஸ்ட்ரோ’ திரு யுவன்ஷங்கர் ராஜா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.
மண்ணுக்குள் போகும் வரை மனசுக்குள் நிறைந்திருக்கும் முதல் காதல். அதுவும் பள்ளி நாட்களில் பக்குவம் இல்லாத வயதில் பொசுக்கென்று பூத்துவிடும் அந்தக் காதல் வயசானாலும் வாடிப்போகாமல் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட காதலை கொண்டாடும் இளமை துள்ளும் படமாக உருவாகி வருகிறது நினைவெல்லாம் நீயடா. படம் பார்ப்பவர்கள் எல்லோரையும் மீண்டும் பள்ளிக்கூடம் போக மாட்டோமா என்று ஏங்க வைக்கும். இசைஞானியின் ஐந்து பாடல்களும் மனதை மயக்கும் ரகம். பிரஜன், மனிஷா, சினாமிகா மட்டுமல்லாமல் இளம் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் ரோஹித், யுவா ஜோடிக்கும் இந்த படம் மிகப்பெரிய அடையாளதை உருவாக்கித் தரும். இந்த படத்தை மே மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.