சென்னை: ஊட்டி கொடைக்கானலில் செயல்படுத்தப்படும் இபாஸ் அமைப்பு துல்லியமான தரவுகளை பதிவுசெய்யவில்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது.

நீலகிரி மற்றும் கொடைக்கானலில் செயல்படுத்தப்படும்  ,பாஸ் அமைப்பு, சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் தொடர்பான துல்லியமான தரவுகளைப் பதிவு செய்யவில்லை என்று  அதிருப்தி தெரிவித்துள்ள மெட்ராஸ் உயர்நீதிமன்றம், மாவட்ட நிர்வாகம்,  தன்னியக்க நம்பர் பிளேட் அங்கீகாரம் கேமராக்கள் மற்றும் பிற வழிமுறைகளை நிறுவ வலியுறுத்தி உள்ளது.

உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குக் கோடைகாலத்தில் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இது அந்த மலைப் பிரதேசங்களின் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, அதனை கட்டுப்படுத்த, கொரோனா காலத்தைப் போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி,  மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில் இ-பாஸ் நடைமுறை  முதன்முதலில் அமல்படுத்தப்பட்டது. இதற்காக  இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை தமிழ்நாடு அரசு  மே 5-ஆம் தேதி வெளியிட்டது. அதில் பச்சை, ஊதா, நீலம் என மூன்று நிறங்களைக் கொண்ட கோடுகளுடன் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதைப் பெற்றால் மட்டுமே வாகனங்கள்  ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பாங்கான  இடங்களுக்குள் செல்ல அனுமதியளிக்கப்படும். இந்த நடைமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறைக்கு உள்ளுர் மக்கள் வரவேற்பு தெரிவித்தால் சுற்றுபயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால் இ-பாஸ் நடைமுறை முழுமையாக செயல்படுத்தப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இபாஸ் வழக்கு நவம்பர் 8ந்தேதி மீண்டும விசாரணை வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,  ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே சுற்றுச்சூழல் மாசு மற்றும் வனம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம், ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல முடியும் என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்களை நியமித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த  வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் வீடியோ கான்பரன்சில் ஆஜரானார்கள். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள்,

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் இவ்விரு இடங்களுக்கும் வருகை தந்துள்ளதாக தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இரு மாவட்ட கலெக்டர்கள் அளித்த அறிக்கையில் கூறியுள்ள புள்ளி விவரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் அது தவறான முடிவுக்கு வழி வகுத்து விடும். உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும்.  இபாஸ் இல்லாமல் எந்த வாகனமும் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இபாஸ் பெற்ற பிறகே வாகனங்களை அனுமதிக்க வேண்டும்.

இபாஸ் பெறுவதற்கு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்லாமல் 5 கிலோமீட்டர் தூரத்தில்கூட சென்டர்களை வைக்கலாம். கியூஆர் கோர்டு மூலம் இபாஸ் பெறவும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். இதற்காக  மாவட்ட நிர்வாகம்,  தன்னியக்க நம்பர் பிளேட் அங்கீகாரம் கேமராக்கள் மற்றும் பிற வழிமுறைகளை நிறுவி நடவடிக்கை மேற்கொள்ளலாம்.  இதனால் வாகன நெரிசலை தவிர்க்கலாம்.

மேலும்,  இபாஸுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பத்தில் உரிமம் பெற்ற ரிசார்ட்கள், ஹோட்டல்கள் குறித்த விபரங்களை சேர்க்க முடியுமா என்பது குறித்து இரு மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மாமல்லபுரத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு பசுமை வரி வசூலிப்பதுபோல் வாகனங்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வருபவர்களிடமும் வசூலிக்க முடியுமா?. இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்குமே என்று தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து கருத்து தெரிவிக்கவும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.